×

கல்குவாரிகளை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

சென்னை: கல்குவாரிகளை அவ்வப்போது அதிகாரிகள் உரிய ஆய்வுகள் செய்து கண்காணிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர்- கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெடிவிபத்தின் அதிர்வால் அருகேயுள்ள கடம்பன்குளம் கிராமத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், வீட்டில் இருந்தவர்கள் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

இத்தகைய விபத்துகள் நேராதவகையில் வருங்காலங்களில் கல்குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்வதற்கான வரையறைகளை மேலும் முறைப்படுத்திட வேண்டும். அத்துடன், அரசு அதிகாரிகள் மாதம் ஒருமுறை கல்குவாரிகளுக்கு நேரில் சென்று அவை விதிமுறைப்படி இயங்குகின்றனவா என்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகின்றனவா என்றும் கண்காணிப்பதை அரசு அவ்வப்போது உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கல்குவாரிகளை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்: அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,Tamil Nadu government ,Liberation Tigers Party ,Virudhunagar district ,Aviyur ,Kariyapatti- Lower Uppilikundu ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்